விதை முதல் செழிப்பான செடிகள் வரை எலுமிச்சை சாகுபடிக்கு சூரிய ஒளி, காற்று சுழற்சி மற்றும் நீர்ப்பாசனம் மிகவும் முக்கியமாது. நன்கு வடிகட்டிய களிமண், மணல் நிறைந்த ஈரமான மற்றும் சமச்சீர் கார-அமிலத்தன்மை கொண்ட மண், சத்தான எலுமிச்சைகளை பெற உதவும்.
மண் மற்றும் தட்பவெப்பநிலை
- ஏராளமான சூரிய ஒளி மற்றும் முறையான நீர்ப்பாசனத்துடன் கூடிய மணல் நிறைந்த களிமண், நன்கு வடிகட்டிய மற்றும் ஈரமான மண் எலுமிச்சை சாகுபடி செய்ய உகந்தவை.
- வெப்பம் மற்றும் மிதவெப்ப மண்டல பயிர் கடல் மட்டத்திலிருந்து 1000 மீட்டர் வரை நன்கு வளரும்.
விதை நேர்த்தி மற்றும் விதைப்பு
- விதைக்கும் முன்பு எலுமிச்சை விதைகளை நேர்த்தி செய்வது அவசியமாகும். விதைகளை மேன்கோசெப் என்ற மருந்தை 5 கிராம்/ ஒரு கிலோ விதை என்ற அளவில் கலந்து பிறகு நாற்றங்காலில் விதைக்கவேண்டும்.
- விதைகளை நன்கு நிழல் உள்ள இடங்களில் மட்டுமே விதைக்கவேண்டும்.
- விதைகளை காகித பை அல்லது குழித்தட்டுக்களில் இட்டு பிறகு அதனை நிழலில் வைக்கவேண்டும்.
நடவு மற்றும் இடைவெளி
நன்கு முளைத்த நோயற்ற செடிகளை மட்டுமே வயலில் நடவு செய்ய வேண்டும். மேலும் நடவு செய்ய டிசம்பர்- ஜனவரி மற்றும் ஜூன் -செப்டம்பர் மாதங்கள் ஏற்றதாகும்.
செடிகளை நடவு செய்யும்போது செடிகளுக்கு இடையே 5-6 மீட்டர் இடைவெளி பின்பற்றவேண்டும்.
நடவின்போது ஒரு செடிக்கு 150 கிராம் வேப்பம்புண்ணாக்கு குழிகளில் இட்டு நடவு செய்யவேண்டும்.
உரமேலாண்மை
- எலுமிச்சைக்கு தழைச்சத்தை இரண்டு பகுதிகளாகப் பிரித்து மார்ச் மற்றும் அக்டோபர் மாதங்களில் இடவேண்டும்.
- நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் ரசாயன உரங்களை அக்டோபர் மாதங்களில் இடவேண்டும்.
வ.எண் | உரத்தின் பெயர் | முதல் வருடம் | வருடா வருடம் அதிகரிப்பு | 6 வருடங்களுக்குப் பிறகு |
1. | தொழு உரம் | 10 கிலோ | 5 கிலோ | 30 கிலோ |
2. | நைட்ரஜன் | 200 கிராம் | 100 கிராம் | 600 கிராம் |
3. | பாஸ்பேட் உரம் | 100 கிராம் | 25 கிராம் | 200 கிராம் |
4. | பொட்டாஷ் | 100 கிராம் | 40 கிராம் | 300 கிராம் |
பின்செய் நேர்த்தி
- எலுமிச்சை செடியை தரையிலிருந்து 45 செ.மீ உயரம் வரையுள்ள அனைத்து பக்க இலைகளை முதல் இரண்டு ஆண்டுகளுக்குள் நீக்கவேண்டும்.
- பக்க கிளைகளை நீக்கிய பிறகு ஒரு மரத்திற்கு 30 கிலோ பசுந்தாள் உரங்களை மூன்று மாதத்திற்கு ஒரு முறை இடவேண்டும்.
ஒருங்கிணைந்த பயிர் பாதுகாப்பு
எலுமிச்சையில் அதிக அளவில் பூச்சி தாக்குதல் ஏற்படும்.அவை,
- பழ ஈக்கள்
- இலைப்பேன்
- அசுவினி
- தண்டு துளைப்பான்
- வெள்ளை ஈக்கள்
கட்டுப்படுத்தும் முறை
- இதனை கட்டுப்படுத்த டைமீதோயேட் 30% இ.சி ( Dimethoate 30% EC) @ 30 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும் (அல்லது)
- கலப்பு மருந்து (ப்ரொஃபேனோபாஸ் 40% + சைபர்மித்ரின் 4% இ.சி) @ 25 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும் (அல்லது)
- ஃப்லூபென்டாமைட் 39.35% எஸ்.சி (Flubendiamide 39.35% SC)@ 7 மில்லி/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் தெளிக்கவும்.
சொறி நோய்
இந்த நோய் எலுமிச்சையின் தரத்தை முற்றிலுமாக குறைத்துவிடும். இதனை சரிசெய்ய காப்பர் ஆக்சி குளோரைடு 45% @ 30 கிராம்/ 10 லிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கவேண்டும்.
நீர்நிர்வாகம்
அதிக மகசூலுக்கான திறவுகோல் எலுமிச்சை மரத்திற்கு சரியான நேரத்தில் சரியான அளவு நீர்ப்பாசனம் செய்வதாகும். ஈரமான மற்றும் நன்கு வடிகால் உடைய மண் எலுமிச்சை செடிக்கு அவசியம். மேலும் நீர் தேங்குவதைத் தவிர்க்கவும்.
அறுவடை
எலுமிச்சை நடவு செய்த மூன்றாம் ஆண்டிலிருந்து அறுவடை செய்யலாம்.