HomeCropதக்காளி சாகுபடி 

தக்காளி சாகுபடி 

தக்காளி சோலனேசியே குடும்பத்தை சேர்ந்தது. உலகம் முழுவதும் பயிரிடப்படும் காய்கறிகளுள் தக்காளியும் ஒன்று. தக்காளியில் அத்தியாவசிய அமினோ அமிலங்கள், வைட்டமின்கள், சிட்ரிக், ஃபார்மிக் மற்றும் அசிட்டிக் அமிலங்கள் போன்ற ஆரோக்கியமான கரிம அமிலங்கள் ஏராளமாக இருப்பதால் தக்காளி பாதுகாப்பு உணவுகளின் பட்டியலில் முக்கிய இடத்தை வகிக்கிறது. பழத்தின் கண்ணைக் கவரும் சிவப்பு நிறம் லைகோபீனிலிருந்து வருகிறது. குறைந்த காலத்தில் அதிக மகசூல் தரக்கூடிய தக்காளி சாகுபடியை பற்றி பார்க்கலாம். 

பயிர் வகை

தோட்டக்கலை பயிர்  

ரகங்கள்

பூசா இயர்லி ட்வார்ப், சியோக்ஸ், பூசா உபார், பூசா ரூபி, பூசா சதாபஹர், பந்த் பஹார், அர்கா சாம்ராட். 

பருவம்

தக்காளி ஆண்டு முழுவதும் பயிரிட படும் ஒரு முக்கியமான பயிராகும். இது சம்பா, குருவை என்ற இரண்டு பருவத்திலும் வளரும். 

ஏற்ற மண் வகை

மணற்பாங்கான மண் முதல் கனமான மண் வரை, தக்காளி செடிகளை பல்வேறு மண் வகைகளில் பயிரிடலாம். நல்ல வடிகால் வசதி உள்ள வண்டல் மண் தக்காளி சாகுபடிக்கு உகந்தது. தக்காளிக்கான மண்ணின் pH அளவு 6.0-7.0 வரை இருக்கவேண்டும். 5.0 அல்லது அதற்கும் குறைவான கார அமிலத்தன்மை இருக்கும் நிலையில் லைமிங்  பரிந்துரைக்கப்படுகிறது. 

தட்பவெப்பநிலை

தக்காளிக்கான வெப்பநிலை 21 முதல் 24˚C  வரை இருத்தல் வேண்டும். வெப்பநிலை மற்றும் ஒளி தீவிரத்தால் பழத்தின் எண்ணிக்கை, நிறம் மற்றும் ஊட்டச்சத்து உள்ளடக்கம்  பாதிக்கப்படுகின்றன. விதை முளைப்பதற்கு 20 முதல் 25˚C வரையிலான வெப்பநிலை ஏற்றது. குறைந்த ஈரப்பதம், வறண்ட காற்று மற்றும் அதிக வெப்பநிலை (38˚C) அனைத்தும் பழம் உருவாக்குவதில் எதிர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தும். 

தக்காளிக்கான விதைப்பு மற்றும் நில தயாரிப்பு முறைகள்

நாற்றங்கால் பராமரிப்பு

தக்காளி நடவுப் பயிராக இருப்பதால், ஒரு ஹெக்டேர் பரப்புக்குத் தேவையான நாற்றுகளை வளர்க்க 225 சதுர மீட்டர் பரப்பளவு கொண்ட உயரமான நாற்றுப்படுக்கை போதுமானது. உயர்ந்த விதைப் படுக்கை ஒரு சதுர மீட்டருக்கு 3 கிலோ நன்கு மக்கிய தொழு உரம் மற்றும் 0.5 கிலோ தழைச்சத்து, மணிச்சத்து மற்றும் சாம்பல்சத்து கூடுதலாக இடுவது நாற்றுக்களின் சிறந்த வளர்ச்சிக்கு வழிவகுக்கும். 

விதை அளவு மற்றும் இடைவெளி

ஒரு ஹெக்டருக்கு 400 முதல் 500 கிராம் தக்காளி விதைகள் போதுமானது. 60 முதல் 120 செ.மீ வரை வரிசை இடைவெளியும், 45 முதல் 75 செ.மீ வரை செடிக்கு செடி இடைவெளியும் பொதுவாக கடைபிடிக்கப்படும் இடைவெளி ஆகும். 

நடவு வயல் தயாரித்தல்

தக்காளி சாகுபடிக்கு பயன்படுத்தப்படும் நிலத்தை ஒன்று அல்லது இரண்டு ஆழமான உழவுகள் மூலம் நன்கு துார்வார வேண்டும். மேலும், விவசாயிகளின் தேவைக்கு ஏற்ப வயலில் முகடுகள் மற்றும் பள்ளங்கள் உருவாக்கி நிலத்தை தயார்செய்யலாம்.   

நடவு செய்தல்

பொதுவாக, விதைத்து 20 முதல் 30 நாட்களில் நாற்றுகளை நடவு வயலுக்கு மாற்றலாம்.    

நீர் நிர்வாகம்

நாற்று நட்ட மூன்றாவது நாள் உயிர்த் தண்ணீர் பாய்ச்சவேண்டும். பிறகு, மண்ணின் ஈரத்தன்மைக்கு ஏற்ப நீர் பாய்ச்சலாம். கோடைக்காலத்தில் விளையும் பயிருக்கு 3 முதல் 4 நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சுவது அவசியம். நீண்ட வறட்சி நிலவும் போது பழங்கள் உடைந்து போகும், இதை தவிர்க்க அவ்வப்போது தண்ணீர் பாய்ச்ச வேண்டும். 

உரமேலாண்மை

தக்காளிக்கான பரிந்துரைக்கப்பட்ட உரத்தின் அளவு மண்ணின் வகை பொறுத்து, மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும். தக்காளி சாகுபடியில் ஒரு எக்டருக்கு 15-20 டன் தொழு உரம், 100-125 கிலோ தழைச்சத்து, 50-60 கிலோ மணிச்சத்து மற்றும் 50-60 கிலோ சாம்பல் சத்து பரிந்துரைக்கப்படுகிறது. இறுதி உழவு முடிந்ததும், தொழு உரத்தை மண்ணில் இட வேண்டும். பின்னர் நாற்றுகளை நடவு வயலுக்கு மாற்றுவதற்கு முன்போ அல்லது நடவு வயலுக்கு மாற்றி ஐந்து நாள் கழித்தோ அடியுரமாக 1/3 தழைச்சத்தையம், முழு மணி மற்றும் சாம்பல் சத்தையும் கொடுக்க வேண்டும். மீதமுள்ள 2/3 தழைச்சத்தை சம அளவு பிரித்து 20 மற்றும் 45-ஆம் நாள் கொடுக்க வேண்டும். 

இடை உழவு முறை

களையெடுப்பு

தக்காளி வயலில் களையில்லாமல் பாதுக்காக்க களையெடுத்துல் மற்றும் மண் கட்டுதல் போன்றவற்றை தவறாமல் செய்ய வேண்டும். களை முளைப்பதற்கு முந்தி களைக்கொல்லிகளான பெண்டிமெத்தாலின், ஆக்ஸிஃப்ளோர்ஃபென் பயன்படுத்துவது சிறந்த தீர்வை தரும். பிளாஸ்டிக் அல்லது வைக்கோல் கொண்டு நிலப்போர்வை செய்தும் களைகளைக் கட்டுப்படுத்தலாம். 

பயிர் பாதுகாப்பு

தக்காளி பயிரைத்  தாக்கும் பூச்சிகள்

காய்ப்புழு : ஹெலிகோலெர்பா ஆர்மிஜீரா

அறிகுறிகள்

பொதுவாக தக்காளி பழங்கள் முதிர்ச்சியடையும் போது இந்த காய்ப்புழு அவற்றை சேதப்படுத்துகின்றன. இளந்துளிர்களை இளம்புழுக்கள் உண்ணும். முதிர்ச்சி அடைந்த புழுக்கள் தக்காளியில் வட்ட வடிவ துளையிடும். புழுக்கள் காயிணைத் துளைத்து தலைப்பகுதியை மட்டும் உட்செலுத்தி உடலின் பாதி பகுதியை வெளியே வைத்தக்கொண்டு சாப்பிடும். 

கட்டுப்படுத்தும் முறை
  • தக்காளிக்கான நிலத்தை உழும் போது கடைசியாக ஏக்கருக்கு 100 கிலோ வேப்பம் புண்ணாக்கை போட வேண்டும். 
  • வேப்ப எண்ணெயை (1500-3000 பிபிஎம்) 5 மில்லி / லிட்டர் தண்ணீரில் கலந்து, முட்டைகளைக் கொல்ல பூச்சிகளின்  ஆரம்ப கட்டங்களில் தெளிக்க வேண்டும். 
  • தீவிர தாக்குதலின் போது 0.3 மில்லி / லிட்டர் நீரில் ஃப்ளூபென்டியாமைடு அல்லது 0.3 மில்லி / லிட்டர் நீரில் குளோரன்ட்ரானிலிப்ரோல் பயன்படுத்த வேண்டும். 

 இலை துளைப்பான்: லிரியோமைசா ட்ரைஃபோலியை

 அறிகுறிகள்

 இலைகளில் வெண்ணிற கோடுகள் காணப்படும். நாளடைவில் இலைகள் வாடிக் காய்ந்து போய் உதிரி விடும். 

 கட்டுப்படுத்தும் முறை

ஆரம்ப கட்டங்களில் வெண்ணிற கோடுகள் காணப்படும். தாக்கப்பட்ட இலைகளை சேகரித்து அழிக்க வேண்டும். தீவிரத்தன்மை அதிகரிக்கும் போது, 5% வேப்பங்கொட்டை சாற்றை  தெளிக்கவும். தீவிர சூழ்நிலைகளில் சயண்ட்ரானிலிப்ரோல் 10.26 ஓ.டி – ஐ 1.8 மில்லி/தண்ணீரில் கலந்து பயன்படுத்தவும். 

ஊசித்துளைப்பான்: ட்யுடா அப்சல்யூட்டா

அறிகுறிகள்

ஊசித்துளைப்பான் மொட்டுகள், இலைகள் மற்றும் பழங்களை பாதிக்கும். இலைகளின் மேற்பரப்பு திசுக்களை சுரண்டும். பழங்களில் ஊசி துவார அறிகுறிகளை ஏற்படுத்தும். 

கட்டுப்படுத்தும் முறை

இவற்றை அகற்ற, ஆழமான உழவு செய்ய அறிவுறுத்தப்படுகிறது. தாக்குதலின் அளவை அளவிட, ஏக்கருக்கு 10 முதல் 15 மஞ்சள் ஒட்டும் பொறிகளை அமைப்பது முக்கியம். தீவிர தாக்குதலின் போது ஏக்கருக்கு 60 மி.லி என்ற அளவில் குளோரன்ட்ரானிலிப்ரோல், ஃப்ளூபென்டியாமைடு அல்லது சயண்ட்ரானிலிப்ரோல் பூச்சிக்கொல்லிகளை  தெளிக்க வேண்டும். 

இலைப்பேன்: திரிப்ஸ் டபாசி

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட இலைகள் மேல்நோக்கி சுருண்டு காணப்படும். இலைகளின் மேற்பரப்பில் வெண்ணிறத்திட்டுகளை காணலாம்.இளம் பூச்சிகள் மற்றும் முதிர் பூச்சிகள் இரண்டும் தக்காளியின் பூக்கள், இலைகள் மற்றும் தண்டு ஆகியவற்றின் சாற்றை உறிஞ்சும். தக்காளியில் புள்ளி வாடல் வைரஸ் நோயை பரப்பும்.   

கட்டுப்படுத்தும் முறைகள்

இமிடாக்ளோபிரிட் 70% டபிள்யூ.ஜி போன்ற முறையான பூச்சிக்கொல்லிகளை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.4 கிராம் என்ற அளவில் பயன்படுத்தலாம். 

தக்காளி பயிரைத் தாக்கும் நோய்கள்

செப்டோரியா இலைப்புள்ளி

அறிகுறிகள்

இந்த இலைப்புள்ளி நோய் தக்காளி பயிரின் இலைகளை பாதிக்கும். இலைகளில், கருப்பு எல்லை மற்றும் சாம்பல் மையத்துடன் சிறிய, சீரற்ற திட்டுகள் தோன்றும். சில நேரங்களில், பூக்கள் மற்றும் தண்டுகளும் தாக்கப்படுகின்றன. 

கட்டுப்படுத்தும் முறைகள்

பாதிக்கப்பட்ட தாவர பகுதிகளை நீக்கி அழித்துவிட வேண்டும். 0.2% என்ற விகிதத்தில் ஜினெப் அல்லது மான்கோசெப் இட வேண்டும். 

தக்காளி புள்ளி வாடல் நோய்

அறிகுறிகள்

பாதிக்கப்பட்ட தாவரம் வளர்ச்சி குன்றி காணப்படும். தாவரத்தில் வெளிர், பச்சை புள்ளியமைப்புகள் தோன்றும். மேலும்,  வெயில் நாட்களில் இளம் இலைகள் வாடத் தொடங்கும். 

கட்டுப்படுத்தும் முறைகள்

விதைப்பிற்கு நோயற்ற ஆரோக்கியமான செடிகளின் விதைகளை பயன்படுத்த வேண்டும். இலைப்பேன் மூலம் நோய் பரவுவதால், இதனை கட்டுப்படுத்த,  ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.4 கிராம் என்ற விகிதத்தில் இமிடாக்ளோபிரிட் 70% டபிள்யூஜி பூச்சிக்கொல்லியை பயன்படுத்தலாம். 

பயிர் வினையியல் மாறுபாடுகள்

தக்காளி முனை அழுகல்

அறிகுறிகள்

இந்த முனை அழுகல் தக்காளியில் கால்சியம் குறைபாட்டால் ஏற்படுகிறது. இதன் விளைவாக தக்காளி பழத்தின் அடிப்பகுதியில் கரும்புள்ளி உருவாகும். தீவிர நிலையின் பொது பழத்தின் 1/2 முதல் 2/3 வரை கரும்புள்ளி பரவும். இது இரண்டாம் நிலை பூஞ்சை தொற்றுநோயை ஏற்படுத்தக்கூடும். பாதிக்கப்பட்ட பழங்களை உட்கொள்வது பாதுகாப்பற்றது. 

கட்டுப்படுத்தும் முறை

ஜூன் மாதத்திற்குப் பதிலாக ஏப்ரல் மாதத்தில் நாற்றுகளை முன்கூட்டியே நடவு செய்வது முனை அழுகலில் இருந்தது தக்காளியை பாதுகாக்கும். கால்சியம் குளோரைடு இலை வழி தெளிப்பதன் மூலம் இதை கட்டுப்படுத்தலாம். 

பழ வெடிப்பு

அறிகுறிகள்

பழ வெடிப்பு என்பது மண்ணில் போரான் குறைபாட்டின் விளைவாகும். தண்டு முனையில் பழத்தின் மேற்பரப்பில் விரிசல் ஏற்படுவது ஒரு பொதுவான அறிகுறியாகும். பழங்களில் ரேடியல் மற்றும் கான்சென்ட்ரிக் விரிசல் ஏற்படும். இது பெரும்பாலும் முதிர்ந்த பச்சை அல்லது முழுமையாக பழுத்த பழத்தில் உருவாகிறது. 

கட்டுப்படுத்தும் முறை

ஒரு ஹெக்டேருக்கு 10-15 கிலோ போராக்ஸை மண்ணில் இட வேண்டும். நீரில் கரையக்கூடிய போரானை ஒரு லிட்டர் தண்ணீருக்கு 0.3-0.5 கிராம் என்ற அளவில் இலை வழி தெளித்தும் கட்டுப்படுத்தலாம். 

அறுவடை

நடவு செய்த 70 நாட்களுக்குள் பழங்கள் காய்க்கத் தொடங்கிவிடும். தக்காளிப் பழங்கள் சிகப்பாக மாற தொடங்கியதும் அறுவடை செய்யலாம். காலை அல்லது மாலை நேரத்தில் பழங்களை அறுவடை செய்ய வேண்டும்.   

மகசூல்

திறந்த மகரந்தச் சேர்க்கை சாகுபடியில் பொதுவாக ஒரு ஹெக்டேருக்கு 250-300 குவிண்டால் மகசூல் கிடைக்கும். கலப்பினங்களில் இருந்து ஹெக்டேருக்கு 500 குவிண்டால் வரை மகசூல் வரும்.  

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்