HomeCropரோஜா சாகுபடி

ரோஜா சாகுபடி

மனிதன் பயிரிட்ட முதல் மணம் கொண்ட மலர்களில் ரோஜாவும் ஒன்றாகும், மேலும் இது மலர் அறுவடைகளில் ஒரு சிறப்பு இடத்தைப் பிடித்துள்ளது. ரோஜா மூன்று முதல் நான்கு ஆண்டுகள் தொடர்ந்து நடவு செய்து லாபம் தரும் மலராகும். பண்டைய காலங்களிலிருந்து, ரோஜாக்கள் பிரான்ஸ், சைப்ரஸ், கிரீஸ், இந்தியா, ஈரான், இத்தாலி, மொராக்கோ, அமெரிக்கா மற்றும் பல்கேரியாவில் அத்தியாவசிய எண்ணெய்களுக்காக வளர்க்கப்பட்டு வருகின்றன 

கர்நாடகா, மகாராஷ்டிரா, பஞ்சாப், உத்தரபிரதேசம், டெல்லி மற்றும் சண்டிகர் ஆகியவை முக்கிய ரோஜா உற்பத்தி செய்யும் மாநிலங்களாகும். ரோஜா  வெட்டப்பட்ட பூவாகவும், தோட்ட அலங்காரங்களிலும் பயன்படுத்தப்படுகிறது. மேலும், குல்கண்ட், பன்குரி, ரோஸ் வாட்டர் மற்றும் ரோஸ் ஆயில் போன்ற தயாரிப்புகளை உருவாக்கவும் ரோஜா பயன்படுகிறது. 

பருவம்

ரோஜா ஆண்டு முழுவதும் பயிரிடக்கூடிய ஒரு வற்றாத பயிர். சமவெளிகளில் ரோஜாக்களை செப்டம்பர் மற்றும் அக்டோபர் மாதங்களில் நடவு செய்யலாம். காலநிலையைப் பொறுத்து, இவற்றின் நடவு காலம் மாறுபடும். 

பயிர் வகை

தோட்டக்கலை பயிர்  

ரகங்கள்

செண்ட் ரோஸ், ஃபைவ் ஸ்டார், ரூபி, ரூபி ரெட், அர்கா பரிமல், பரிமளா ஆகியவை திறந்தவெளி சூழலுக்கு ஏற்றவை. தாஜ்மஹால், ரத் கி ராணி, ஈபிள் டவர், சிகாகோ பீஸ், அவலாஞ்சி ஆகியவை பசுமைகுடில்களில் வெட்டப்பட்ட பூக்களாக வளர்க்க உகந்தது. 

மண் மற்றும் தட்பவெப்பநிலை

நல்ல வடிகால் வசதியுள்ள செம்மண் ரோஜா சாகுபடிக்கு உகந்தது. ரோஜாவிற்கான சிறந்த pH அளவு 6.0 – 7.5. 

ரோஜா சாகுபடியில் வெப்பநிலையை கவனிப்பது மிக அவசியம். பகலில் 20 – 25°C வெப்பநிலையிலும், இரவில் 15 – 18°C வெப்பநிலையிலும் தாவரங்கள் வெளிப்படும் வகையில் ரோஜா பயிரிடுவதை சரிசெய்ய வேண்டும். ரோஜா சாகுபடிக்கு குறைந்தபட்சம் 6 மணி நேரம் பிரகாசமான சூரிய ஒளி அவசியம். 

நிலம் தயாரிப்பு

ரோஜா பயிரிடுவதற்கு நிலத்தை உழுது, ஒரு எக்டருக்கு 10 முதல் 12 டன் தொழு உரத்தை மண்ணில் சேர்க்க வேண்டும். மண் இலகுவாகவும், நல்ல வடிகால் வசதியுடனும் இருப்பதை உறுதி செய்யவும். ரோஜா சாகுபடிக்கு நிலத்தை தயார் செய்த பிறகு 1 முதல் 1.5 மீட்டர் அகலமும், 30 முதல் 40 மீட்டர் நீளமும் கொண்ட படுக்கைகள் உருவாக்கப் வேண்டும். பின்னர், மழை பெய்வதற்கு முன், 20 முதல் 30 செ.மீ அகலம், 30 செ.மீ ஆழம் கொண்ட குழிகளை அமைக்கவும். 

நடவு செய்யும் முறை

ரோஜாக்களின் பரப்பளவு மற்றும் வகையைப் பொறுத்து நடவு இடைவெளி வேறுபாடும். வெட்டப்பட்ட பூக்களை உற்பத்தி செய்ய 60 செ.மீ x 30 செ.மீ இடைவெளியைப் பின்பற்றலாம். பொதுவாக, திறந்தவெளி சூழ்நிலைகளில் வரிசையிலிருந்து வரிசைக்கு 2 மீட்டர் இடைவெளியும், செடிக்கு செடி 1 மீட்டர் இடைவெளியும் பரிந்துரைக்கப்பட்டது. 

ரோஜாவின் இனப்பெருக்கம்

ரோஜா வணிக ரீதியாக வெட்டுக்கள் அல்லது மொட்டு ஓட்டுதல் மூலம் இனப்பெருக்கம் செய்யப்படுகிறது, அதே நேரத்தில் பாலியந்தஸ் போன்ற ரகங்கள் முதிர்ந்த தண்டுத்துண்டுகள் மூலமும், மினியேச்சர்கள் இளசான தண்டுத்துண்டுகள் மூலமும் பரப்பப்படுகின்றன. இதேபோல், கலப்பினங்கள் மற்றும்  ஃபுளோரிபந்தா வகைக்கு இனப்பெருக்கம் செய்வதற்கான ஒரு பொதுவான நுட்பம் டி- மொட்டு ஓட்டுதல் ஆகும்.  ரோஜா விதைகள் ரோஜாக்களின் இனப்பெருக்கத்திற்கு வணிக அளவில் பயன்படுத்தப்படுவதில்லை. 

நீர் நிர்வாகம்

புதிதாக நடப்பட்ட ரோஜாக்களுக்கு உடனே  நீர்ப்பாய்ச்சவேண்டும். பின்னர் இரண்டு நாட்களுக்கு ஒரு முறை என வேர்ப்பிடித்து துளிர்கள் வளரும் வரை தண்ணீர் விட வேண்டும். 

அதைத் தொடர்ந்து, கோடையில் ஐந்து நாட்களுக்கு ஒரு முறையும், குளிர்காலத்தில் 10 நாட்களுக்கு ஒரு முறையும்  நீர்ப்பாய்ச்சவேண்டும்.  சொட்டு நீர் பாசன முறை ரோஜா சாகுபடிக்கு மிகவும் ஏற்றது. 

உரமேலாண்மை

உயர்தர பூக்களுக்கு இயற்கை உரங்களைப் பயன்படுத்துவது நல்லது. நடவு செய்வதற்கு முன், ஒவ்வொரு குழி துளையையும் 100 கிராம் சிங்கிள் சூப்பர் பாஸ்பேட்  மற்றும் 5 கிலோ தொழு உரத்தால் நிரப்பவும். மேலும், ஒவ்வொரு கவாத்து செய்த பிறகும் ஒவ்வொரு செடிக்கும் 100-200 கிராம் யூரியா, சிங்கிள் சூப்பர் பாஸ்பேட் மற்றும் மியூரேட் ஆஃப் பொட்டாஷ் – ஐ சேர்க்கவும்.   

இடை உழவு முறை

களையெடுப்பு

களைச்செடிகளால் ரோஜா சாகுபடி கடுமையாக பாதிக்கப்படுகிறது. களைகள் நீர் மற்றும் ஊட்டச்சத்துக்களை உட்கொள்வதோடு மட்டுமல்லாமல் பல நோய்கள் மற்றும் பூச்சிகளின் வாழ்விடங்களாக செயல்படுகின்றன. அடிக்கடி கையால் களையெடுப்பதன் மூலமும் அல்லது 2,4-டி மற்றும் நைட்ரோஃபென் களைக்கொல்லிகளை பயன்படுத்தியும் கலைகளை கட்டுப்படுத்தலாம். 

கவாத்து செய்தல்

கவாத்து என்பது தாவரத்தின் வீரியம் மற்றும் உற்பத்தித்திறனை அதிகரிப்பதற்காக ஒரு தாவரத்தின் விரும்பத்தகாத மற்றும் உற்பத்தியற்ற பகுதிகளை அகற்றும் நடைமுறையாகும். இதனை ரோஜா செடிகளில் வழக்கமாக அக்டோபர் முதல் நவம்பர் மாதத்தில் செய்வது நல்லது . கவாத்து செய்தவுடன் வெட்டு முனைகளில் போர்டோ பசையை  பயன்படுத்துவது செடிகளை தொற்றுநோய்களிலிருந்து பாதுகாக்க உதவும். 

பயிர் பாதுகாப்பு

ரோஜா பயிரைத் தாக்கும் பூச்சிகள்

அசுவினி

ஜனவரி, பிப்ரவரி மாதங்களில் இலைகள் மற்றும் பூ மொட்டுகளில் அசுவினி பூச்சிகளின் தாக்கம் அதிகமாக இருக்கும். பூச்சிகள்  இளம் தண்டு மற்றும் மலர்களில் கூட்டமாக இருந்து சாறை உறிஞ்சும். இவற்றின் தாக்கத்தினால் இளம் குருத்துக்கள் உதிர்ந்துவிடும், மலர்கள் சாயமற்று காணப்படும். இதனைக் கட்டுப்படுத்த மீதைல் டெமட்டான் 25 இசி 2 மில்லி மருந்தை ஒரு லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்கவேண்டும். 

இலைப்பேன்

முதிர் பூச்சிகள் அடர் பழுப்பு அல்லது கருப்பு நிறத்திலும், இளம் பூச்சிகள் சிவப்பு நிறத்திலும் இருக்கும்.  பூச்சிகள் இலைகள் மற்றும் மொக்குகளில் இருந்து சாற்றை  உறிஞ்சும். இளம் பூச்சிகள் மற்றும் முதிர் பூச்சிகள் இரண்டும் பூக்கள் மற்றும் இலைகளை தாக்கும். இதன் விளைவாக, இலைகள் சுருங்கியும், சாம்பல் கலந்த வெண்மையான நிறத்திலும் காணப்படும். நாளடைவில் இலைகள் மற்றும் பூக்கள் காய்ந்து உதிர்ந்துவிடும். இதனை கட்டுப்படுத்த, கார்பாரில் (3 கிராம் / லிட்டர்), குளோரோபைரிபாஸ் + சைபர்மெத்ரின் ஆகியவற்றை 2 மில்லி / லிட்டர் தண்ணீரில் கலந்து தெளிக்க வேண்டும். 

செதில் பூச்சி

தண்டு முழுவதும் சிவப்பு செதில்களால் மூடப்பட்டிருக்கும். இப்பூச்சிகள் செடிகளின் சாற்றை உறிஞ்சி, செடிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும். நோய் தாக்கிய கிளைகளை அகற்றி எரித்துவிடவேண்டும். மேலும், இதை கட்டுப்படுத்த, மண்ணெண்ணெய் அல்லது டீசல் -ஐ பருத்தியில் நனைத்து கொண்டு செதில்களைத் தேய்த்தல் வேண்டும். தீவிர தாக்குதலின் போது, இமிடாக்ளோபிரிட் 0.5 மி.லி / லிட்டர் தண்ணீர் அல்லது அசிட்டாமிபிரிட்  0.5 கிராம் / லிட்டர் தண்ணீரில் கலந்து இலைவழி தெளிப்பது செதில்களைக் கட்டுப்படுத்த உதவும். 

ரோஜா பயிரைத் தாக்கும் நோய்கள்

நுனி கருகல்

இந்த நோய் கவாத்து செய்த பிறகு ரோஜா செடிகளில் தோன்றும். வெட்டப்பட்ட தண்டுகள் காய்ந்து மேலே இருந்து கீழ்நோக்கி கருப்பு நிறமாக மாறத் தொடங்கும். நோய் வேர் வரை பரவி, முழு தாவரமும் இறந்துவிடும். இந்த நோயை கட்டுப்படுத்த, கவாத்து செய்து பாதிக்கப்பட்ட இளம் தளிர்களை நீக்க வேண்டும். கவாத்து செய்த இடத்தில் சௌபட்டியா பசை அல்லது போர்டோ பசையை பயன்படுத்த வேண்டும். 

கரும்புள்ளி நோய்

இலையின் இருபுறமும் வட்டமான கருப்பு புள்ளிகள் (1 செ.மீ க்கும் குறைவான விட்டம்) தோன்றும்; இலைகள் வெளிறிய கீற்றுகள் போல் தோன்றி, காய்ந்து உதிர்ந்து விடும். கேப்டான் (0.2%) அல்லது கார்பன்டாசிம் (1 கிராம் / லிட்டர் தண்ணீர்) என்ற பூஞ்சை கொல்லிகளை தெளிப்பதன் மூலம் இந்த நோயை திறம்பட கட்டுப்படுத்தலாம். 

சாம்பல் நோய்

இந்நோய் பொதுவாக குறைந்த வெப்பநிலை மற்றும் அதிக ஈரப்பதம் உள்ள பகுதிகளில் ஏற்படுகிறது. இளம் இலைகள், தண்டுகள் மற்றும் மொட்டுகளின் மேற்பரப்பில் வெள்ளைநிறப்படலம் போன்று காணப்படும். தீவிர தாக்குதலின் போது, 0.3% ஈராமான கந்தகத்தை தெளிக்கவும் அல்லது எக்டருக்கு 25 கிலோ என்ற அளவில் கந்தகம் பயன்படுத்தவும்.  

அறுவடை

ரோஜாச் செடிகள் நட்ட முதல் ஆண்டிலேயே பூக்கத் தொடங்கும். இரண்டு முதல் பத்தாம்  ஆண்டு வரை மகசூல் கிடைக்கும். கவாத்து செய்த 45 நாட்கள் கழித்து பூக்க ஆரம்பிக்கும். பூ மொட்டுகள் பாதி திறந்த நிலையில் இருக்கும்போது அறுவடை செய்ய தொடங்கலாம். நன்கு மலர்ந்த மலர்களை அதிகாலையில் பறிக்கவேண்டும். 

மகசூல்

ரோஜா பொதுவாக எக்டருக்கு  7.5 டன் மற்றும் ஒரு சதுர மீட்டருக்கு 300 முதல் 350 பூக்களை தரும்(வெட்டப்பட்ட பூக்கள்).

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்