HomeCropவாழை சாகுபடி

வாழை சாகுபடி

வாழை என்பது மூசா ( மூசாசியே குடும்பம்) இனத்தை சேர்ந்த ஒரு பழ வகை தாவரமாகும். இது முதன்மையாக உணவுக்காகவும், இரண்டாவதாக  ஜவுளித் தொழிலில் பயன்படுத்தப்படும் நார் உற்பத்திக்காகவும், அலங்கார நோக்கங்களுக்காகவும், பயிரிடப்படுகிறது. ஏறக்குறைய அனைத்து வாழைப்பழங்களும் இரண்டு காட்டு இனங்களிலிருந்து வந்தவை -அதாவது  மூசா அகுமினாடா மற்றும் மூசா பால்பிசியானா. வாழைப்பழ உற்பத்தியில் இந்தியா முன்னணியில் உள்ளது, அதாவது ஆண்டுக்கு 31 மில்லியன் டன் வாழைப்பழத்தை உற்பத்தி செய்கிறது.

மண் மற்றும் தட்பவெப்பநிலை

நன்கு வடிகால் உடைய, ஆழமான, வளமான களிமண் மற்றும் உப்பு நிறைந்த களிமண் வாழைகளை வளர்ப்பதற்கு சிறந்தது. மேலும் மண்ணில் போதுமான வளம் மற்றும் ஈரப்பதம் தாங்கும் திறன் இருந்தால் அது மிகவும் அற்புதமானது. மேலும் வாழை வெப்பமண்டலங்களுக்கு ஏற்ற செடியாகும். 

நடவு பருவம்

நீர் வசதி இருப்பின் எப்போது வேண்டுமானாலும் நடவு செய்யலாம். மேலும் ஜனவரி – பிப்ரவரி மற்றும் ஆகஸ்ட் – செப்டம்பர் மாதங்கள் நடவு செய்ய ஏற்றதாகும்.

விதைக்கன்றுகள்  தேர்வு செய்தல்

வாழை சாகுபடியில் விதைக்கன்றுகள் தேர்வு செய்வதில் மிகவும் கவனம் தேவை.  நல்ல மகசூல் பெற தரமான கன்றுகளைத் தேர்வு செய்து நடுதல் வேண்டும். தாய் மரத்திற்கு அருகாமையில், கிழங்கிலிருந்து வளரும், கன்றின் உயரம் 2-3 அடி இருப்பது சிறந்தவை. மேலும் இவற்றின் எடை 1.5 முதல் 2.0 கிலோ எடை இருக்கவேண்டும்.

விதைக்கன்றுகள் நேர்த்தி செய்தல்

வாழையில் பெரும்பாலான நோய் விதை கன்றுகள் வழியாக வருகிறது. இதை கட்டுப்படுத்த கிழங்குகளை 5 நிமிடம் 0.1 சதம்  எமிசான் கரைசலில் ( 1 கிராமினை 1 லிட்டர் தண்ணீரில் கரைக்கவேண்டும்) நனைத்து நடவு  செய்யவேண்டும். இவ்வாறு செய்வதனால் வாடல் நோயை கட்டுப்படுத்தலாம். 

நிலம் தயாரித்தல்

நிலத்தை 2 முதல்  4 தடவை நன்கு உழவேண்டும். பிறகு நன்கு மக்கிய தொழு உரத்தை 25 டன் என்ற அளவில் ஒரு ஏக்கருக்கு கொடுக்கவேண்டும். பிறகு நேர்த்தி செய்த கன்றுகள் போதிய இடைவெளியில் நடவுசெய்ய வேண்டும்.

நடவு

நேர்த்தி செய்யப்பட்ட கன்றுகளை 45 சென்டிமீட்டர் ஆழமுள்ள குழிகளில் வேப்பம்புண்ணாக்கு 200 கிராம் இட்டு பிறகு கன்றுகளை நடவு செய்யவேண்டும். மேலும் நடவு  கன்றை சுற்றி நன்கு மிதித்து விட வேண்டும்.

இடைவெளி மற்றும் பயிர் எண்ணிக்கை

பெரும்பாலான வாழை ரகங்கள் 1.8 x 1.8 மீட்டர் என்ற இடைவெளியில் நடவு செய்யலாம். இந்த இடைவெளியில் 1200 செடி/ ஏக்கர் என்ற அளவில் நடவு செய்யலாம்.

உர மேலாண்மை

நன்கு மக்கிய எரு 10 கிலோ, 10-26-26 என்ற உரம் 100 கிராம், யூமிக் பவுடர் 25 கிராம் மற்றும் அம்மோனியம் சல்பேட் 100 கிராம்/ ஒரு செடி என்ற அளவில் அடியுரமாகவும் மற்றும் 2.5வது மாதத்தில் ஒருமுறை என, பிறகு 5வது மாதத்தில் ஒரு முறை என கொடுக்கவும். பிறகு 5 மாதத்திற்கு மேல் டிஏபி 100 கிராம் மற்றும் மியூரேட் ஆப் பொட்டாஷ் 180 கிராம் மற்றும் மைக்ரோ நியூட்ரியண்ட் 50 கிராம்/ ஒரு செடி என்ற அளவில் 2 மாதங்களுக்கு ஒரு முறை என கொடுக்கவும். 

நீர் நிர்வாகம்

பொதுவாக வாழைக்கு அதிக தண்ணீர் தேவைப்படும். கோடை காலங்களில் 4-5 நாட்களுக்கு ஒருமுறை தண்ணீர் பாய்ச்சவேண்டும். அதேபோல் குளிர் களங்களில் 7-8நாட்களுக்கு ஒரு முறை தண்ணீர் பாய்ச்சலாம். 

களை மேலாண்மை

வாழையில் களைக்கட்டுப்பாடு மிகவும் முக்கியமான ஒன்று. சரியான நேரங்களில் களைகளை அகற்றாவிட்டால் வாழையின் மகசூலை முற்றிலுமாக குறைத்துவிடும். மேலும் களைகள் அதிக அளவில் இருந்தால் களைக்கொல்லியை பயன்படுத்தாமல் ஆட்கள் கொண்டு களைகளை அகற்றுவது நல்லது.  மேலும் நீங்கள் வாழையுடன் ஊடுபயிராக மற்ற பயிர் செய்வதனால் களைகளை கட்டுப்படுத்தலாம்.

ஊடுபயிர்

வாழையில் ஊடுபயிராக அவரை வகைக் காய்கறிகள், பீட்ரூட், சணல் போன்றவற்றை சாகுபடி செய்யலாம். பூசணி குடும்பத்தில் வரும் எந்த வித காய்கறிகளையும் ஊடுபயிராக நடவு செய்ய கூடாது.

ஒருங்கிணைந்த பயிர்ப் பாதுகாப்பு

வாழையைத் தாக்கும் பூச்சிகள்

கிழங்கு மற்றும் தண்டு துளைக்கும் வண்டு

இதனால் வாழையில் மகசூல் முற்றியலுமாக குறைய அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனைக் கட்டுப்படுத்த 10 முதல் 20 கிராம் கார்பரில் என்ற மருந்தை தண்டுப் பகுதியைச் சுற்றி தூவி மண்ணைக் கிளறிவிடவேண்டும். அல்லது மோனோகுரோட்டோபாஸ் 1.50 மில்லியுடன்  350 மில்லி தண்ணீர் கலந்து ஊசி மூலம் செலுத்தலாம்

வாழை அசுவினி

இது வாழையில் முடிக்கொத்து நோயைப் பரப்பும்  வைரஸ் கிருமியைப் பரப்புகிறது. இதனைக் கட்டுப்படுத்த மெத்தில் டெமட்டான் 2 மில்லி தண்ணீர் என்ற விகிதத்தில் கலந்து தண்டின் மேலிருந்து  அடி வரை தெளிக்கவேண்டும்.

நூற்புழுக்கள்

நூற்புழுக்கள் வாழையின் வேர் மற்றும் கிழங்குகளில் சாற்றை உறிஞ்சி வாழ்கின்றன. இதனால் தாக்கப்பட்ட வாழைகள் முழுவதுமாக வாடிவிடும். இதனை கட்டுப்படுத்த நடவுக்கு வாழைக்கன்றுகளை நூற்புழுக்கள் தாக்காத இடங்களிலிருந்து தேர்வு செய்ய வேண்டும். மேலும் தாக்கிய இடங்களில் மீண்டும் வாழையைப் பயிரிடாமல் மாற்றுப்பயிர் செய்ய வேண்டும்.

வாழையைத் தாக்கும் நோய்கள்

சிகடோக்கா இலைப்புள்ளி நோய்

இந்நோய் தாக்கிய இலைகளில் முதலில் மஞ்சள் நிறப் புள்ளிகள் தோன்றி, பின் அவை பழுப்பு நிறமாக  மாறி இருக்கும். பாதிக்கப்பட்ட இலைகள் நுனியிலிருந்து கருக ஆரம்பித்து இலை முழுவதும் விரைவில் காய்ந்து விடும். இதனை கட்டுப்படுத்த கார்பென்டாசிம் 2 கிராம் மருந்தை 100 மில்லி அளவு தண்ணீரில் கரைத்து அதிலிருந்து 3 மில்லி மருந்தை எடுத்த ஊசி மூலம் தண்டுப்பகுதியில் கொடுக்கலாம். அல்லது இதே மருந்தை 2.5கிராம்/ ஒருலிட்டர் தண்ணீர் என்ற அளவில் கலந்து தெளிக்கலாம். 

அறுவடை

வாழைக் கன்று நட்டு 12 முதல் 15 மாதங்கள் கழித்து அறுவடைக்குத் தயாராகிவிடும். மேலும் மண் மற்றும் இரகங்கள் பொறுத்து பூ பூத்த 90 முதல் 150 நாட்கள் கழித்து தார்களை அறுவடை செய்யலாம்.

 

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்