HomeGovt for Farmersதேசிய மூங்கில் பணி

தேசிய மூங்கில் பணி

மூங்கில் சாகுபடி விவசாயிகளுக்கு ஒரு முக்கியமான தொழிலாகும். இந்தியாவில் போதுமான உயர்தர மூங்கில்களின் இருப்பு உள்ளதால் பெரும்பாலான விவசாயிகள் மூங்கில் சாகுபடியில் ஈடுபட்டுள்ளனர். இந்தியாவில் மூங்கில் சாகுபடியின் பரப்பளவு சுமார் 13.96 மில்லியன் ஹெக்டேர்களுக்கும் மேலாக உள்ளது, மேலும் 136 க்கும் மேற்பட்ட தனித்துவமான மூங்கில் இனங்களை கொண்டுள்ளது. ‘ஏழைகளின்  மரம்’ என்றும் அழைக்கப்படும் மூங்கிலின் உற்பத்தில் இந்தியா ‘இரண்டாம் இடத்தில்’ உள்ளது. 

இத்தகைய சிறப்பு மிக்க மூங்கில் உற்பத்தியை அதிகரிக்க ‘தேசிய மூங்கில் பணி’ என்னும் திட்டத்தை 2006-07 ஆம் ஆண்டு மத்திய அரசு தொடங்கியது. இந்த பணி தற்போது ஒருங்கிணைந்த தோட்டக்கலை மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ் ஒரு துணைத் திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. மேலும், மறுசீரமைக்கப்பட்ட ‘தேசிய மூங்கில் இயக்கம்’ 2018-19 ஆம் ஆண்டு முதல் அங்கீகரிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

திட்டத்தின் முக்கிய நோக்கங்கள்

  • விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது. 
  • பருவநிலை மாற்றத்தை எதிர்கொள்வதற்கும், தொழிற்சாலைகளுக்கு தரமான மூலப்பொருட்கள் கிடைப்பதற்கும், காடு மட்டும் அல்லாது அரசு மற்றும் தனியார் நிலங்களிலும் மூங்கில் சாகுபடியின் பரப்பளவை அதிகரிப்பது. 
  • மூங்கில் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட பொருட்களை சந்தைப்படுத்த உதவுவது. 
  • மூங்கில் துறையில் உள்ள நன்மைகளைப் பற்றி மக்களுக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவது. 
  • மூங்கில் துறையின் முழுமையான வளர்ச்சியை உறுதி செய்வது. 
  • அனைத்து தொழிலாளர்களுக்கும், குறிப்பாக வேலையில்லாத இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவது. 
  • தொழில்துறைக்கும், உற்பத்தியாளருக்கும் இடையே தொடர்பை ஏற்படுத்துவது. 

திட்டத்தின் சிறப்பு அம்சங்கள்

  • இந்த திட்டத்தை செயல்படுத்த 2020-21 முதல் 2022-23 வரையிலான காலகட்டத்திற்கு ரூபாய் 1290 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. 
  • மூங்கில் நர்சரிகளை உருவாக்குதல், மூங்கில் சார்ந்த தொழில்களை ஊக்குவித்தல், ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு மூங்கில் சார்ந்த நடவடிக்கைகளுக்கு இந்திய அரசு 100% வரை நிதி உதவி வழங்குகிறது. 
  • இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களிலும் மற்றும் யூனியன் பிரதேசங்களிலும் இத்திட்டமானது உள்ளடக்கியது. 
  • இத்திட்டத்தின் கீழ், புதிய நாற்றங்கால்களை அமைப்பதற்கும், ஏற்கனவே உள்ளவற்றை வலுப்படுத்துவதற்கும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு, செய்வதன் மூலம் தரமான நடவுப் பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. 
  • மூங்கில் மற்றும் மூங்கிலால் செய்யப்பட்ட கைவினைப் பொருட்களின் சந்தைப்படுத்தலை வலுப்படுத்த, இந்த திட்டமானது  நடவடிக்கை எடுத்து வருகிறது. 
  • நாட்டில் மூங்கில் துறையை மேம்படுத்த விவசாயிகள், சுயஉதவி குழுக்கள், தொழில் சங்கங்கள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்கள் போன்ற பல்வேறு பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படுவதை இந்த பணி உறுதி செய்கிறது. 

விண்ணப்பிக்கும் முறை

தேசிய மூங்கில் திட்டம் மாநில நோடல் ஏஜென்சிகள் (SNAs) மூலம் செயல்படுத்தப்படுகிறது. ஆர்வமுள்ள நபர்கள் இத்திட்டத்திற்கு விண்ணப்பிக்க தங்கள் மாநிலத்திலுள்ள அந்தந்த SNA’களைத் தொடர்பு கொள்ளலாம். 

இந்தத் திட்டமானது, மூங்கில் பொருட்களின் இறக்குமதியைக் குறைத்து, விவசாயிகளின் வருமானத்தை அதிகரிக்க உதவுகிறது. கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்திற்கான வருமான ஆதாரத்தை உருவாக்குதல், நிலையான மூங்கில் சாகுபடி நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் மூங்கில் அடிப்படையிலான மதிப்புச் சங்கிலிகளை உருவாக்குதல் ஆகியவற்றில் இந்த பணி கவனம் செலுத்தி வருகிறது.

spot_img

மேலும் அறிய

தொடர்பில் இருக்க

அண்மை தகவல்களைப் பெற எங்களை சப்ஸ்கிரைப் பண்ணுங்கள்

தொடர்புடைய கட்டுரைகள்